குருதிப்புனல்.. - வெகு நாட்களுக்கு பிறகு குருதிப்புனல் பார்க்கும் வாய்ப்பு என் நண்பர் மூலமாக கிடைத்தது. தேடியும் கிடைக்காத படம் தெலுங்கு அறை பகிர்வரின் தமிழ் நண்பர் மூலமாக கிடைத்தது. படத்தின் முதல் காட்சியிலேயே குருதிப்புனலின் விளக்கத்துடன் ஆரம்பம். காவல் துறையினருக்கு விரித்த வலையில் அப்பாவி குழந்தைகளின் பலியில் தொடங்குகிறது குருதிப்புனல்.
அரசாங்கத்திற்கு தண்ணி காட்டும் ஒரு தீவிரவாத கும்பலை மடக்கும் பணி அர்ஜுனிடம் ஒப்படைக்கப்படுகிறது. Interrogation (அதான் கேள்வி கேட்டு உயிரை வாங்கறது) துறையில் விற்பன்னரான கமலின் உதவியை நாடுகிறார் அர்ஜுன். கமலும், அர்ஜுனும் நண்பர்கள் என்பதால் அந்த வேலை சுலபமாகிறது. அவர்களுக்கு தீவரவாத கும்பலின் அத்துனை தகவல்களும் கிடைக்க ஆரம்பிக்கிறது. அதன் மூலம் திருச்சி ரயில் நிலையத்தில் ஒரு டிரைவர் பிடிபடுகிறான். கமல் அவனை கேள்விக்கணைகளால் தொடுக்க அவன் மசிய மறுக்கிறான். பிறகுதான் தெரிகிறது பிடிபட்டவன் வண்டியின் டிரைவர் அல்ல, இயக்கத்தின் டிரைவர் என்று. இயக்கத்தின் ஆணி வேறான பத்ரியே பிடிபட்டதை எண்ணி வியக்கிறார்கள். பிறகு பத்ரியை இவர்கள் ஆட்படுத்தினார்களா அல்லது அவன் இவர்களை ஆட்படுத்தினானா என்பதே மீதம்.
இது போன்றதொரு கதாபாத்திரத்தை தேர்வு செய்தமைக்காகவே கமலை பாராட்டி ஆக வேண்டும். முதலில் தைரியத்துடன் நாசரை கேள்விகளால் உரித்தேடுக்கும் போதும், தன குடும்பத்தின் ஆபத்தை உணர்ந்து அவருக்கு கீழ்படியும் போதும், அர்ஜுனை குற்ற உணர்ச்சியுடன் பார்த்து கூனி குருகும்போதும், சொல்ல வார்த்தைகள் இல்லை.
நாசரும் சளைத்தவர் இல்லை. "நீ உங்க சைட்ல இருக்க. தோற்கிற சைடு. எங்க சைடுக்கு வா. ஜெயிக்கிற சைடு. " என கமலுக்கு சவால் விடுவதிலும். "உன்னால என்ன கொல்ல முடியாது. உன் மிடில் கிளாஸ் மனசாட்சி உன்ன உறுத்தி உறுத்தி கொன்னுடும்." என அழுத்துவதிலும் முத்திரை பதிக்கிறார். நாசரில்லாமல் கண்டிப்பாக குருதிப்புனல் இல்லை.
"எந்த நிலைமையிலாவது நீயும் நானும் இத செய்வோமா" என அப்பாவியாக ஆதங்கப்படுவதிலும். நாசரை காரி உமிழ்வதிலும் நேர்மையின் வாலை பிடித்துக்கொண்டு செத்து மடிகிறார்.
ஒவ்வொரு கதப்பத்திரத்துக்கும் இருக்கும் அதன் தனித்துவும், சூழ்நிலைக்கைதி என்பதன் உண்மையான அர்த்தம், தீவிரவாதிகள் உருவாகும் விதம், நேர்மையின் விலை இவைகளை ஆர்ப்பாட்டமில்லாமல், வசூலும் இல்லாமல் பதிவு செய்த படம். தமிழ் கினிமாவில் புது முயற்சிகளை இப்பொழுது எதிர்பார்ப்பவர்கள் 1996 இல் வெளியான இப்படத்தை பூஜிக்கலாம்.
Note: This movie is inspired from the movie "Droh Kaal (Times of betrayal)" by Govind Nihalani.