Wednesday, 31 August 2011

சொர்க்கம்,நகரம்..

5 comments:

மதுரை வடக்கு வெளி வீதியின் சாலை பழுத்த வேலை நாளின் உச்ச நேர வாகன வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. 23G திருப்பாலையில் ஏறிய ராஜுவையும், இன்னும் சிலரையும் மதுரை ரயில் நிலையத்தில் உதிர்த்து விட்டு கருமமே கண்ணாக பெரியார் நிலையத்தை நோக்கி இருமிக்கொண்டே நகர்ந்தது. ராஜுவின் பேன்ட் பையிலிருந்து தொடங்கி, ஓருடல், இருதலைகளை கொண்டு ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போல இயர் போன் நீண்டு காதில் "மங்காத்தா டா.." என்றது. ராஜூ கைக்கடிகாரத்தை பார்த்தான். 3:30 என காலம் சொல்லாமல் நேரம் மட்டும் சொன்னது. தலையை சரி செய்தபடி, லக்ஷ்மி விலாசை நோக்கி சாலையின் மறுபுறம் அடைந்தான்.

ராஜூ "ஒரு அல்வா"

கடைக்காரர் "சாப்பிடவா?"

"ஆங்.."

அல்வாவை வாயில் வழுக்கியபடியே, வலது பக்கம் திரும்பினான். கண்ணன் கபேயில் வடையுடன் மாஸ்டரும் வெந்து கொண்டிருந்தார். 'ஜல்ல் .." என்ற சத்தத்துடன் மசால் வடை மாவிலிருந்து வடையாக உருமாறிக்கொண்டிருந்தது. ராஜுவின் முகத்தில் சடாரென வாசனை கலந்த புகை முட்டியது. ஒரே புகை. ஆவி.

புகை மண்டலத்தில் எதிரே வரும் வாகனமே தெரியவில்லை. மிகவும் சமீபம் வந்த பின் ஸ்கெட்ச் டிராயிங் போல் வெளி வட்டம் மட்டும் தெரிகிறது. "இங்க எப்பிடித்தான் ஓட்டுராங்களோ!' வியந்தபடி சீட் பெல்டை சரிசெய்தான் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ராமு. 


டிரைவர் 'என்ன சார் பர்ஸ்ட் டைமா?'


ராமு "ம்.. நீங்க?'


"நான் கோர்ஸ் முடிச்சிட்டேன் சார். மொத அட்டம்ப்டிலயே. போனேன். நான் பாட்டு என் வேல உண்டு, நான் உண்டுனு இருந்தேன். வம்பு தும்பு ஒண்ணுக்கும் போல.  திரும்பி வரவும்,அய்யா 'நீ இங்கயே டிரைவரா இருந்துக்கோ' னு சொல்ட்டாரு. '


'அப்போ இங்கயே பெர்மநன்ட்டா?'


'ஆமா சார். வந்து நாப்பத்தஞ்சு வருஷம் ஆவுது.'


'ஓ...'


சற்று நேரம் பேச்சில்லாமல் நேரம் கடக்கிறது. டிரைவர் மறுபடி நியுட்டன் விதிக்கிணங்கி சமநிலையை கலைத்து,


'நீங்க எப்பிடி சார் நேச்சுரலா? இல்ல ஏதும் அசம்பாவிதமா?'


'போன் பேசிட்டே U போட்டேன். வண்டி கண்ட்ரோல் இல்லாம ரோட்டு நடுவுக்கு போக, ஒரு இன்னோவா, சிக்னல் விட்ட நேரம் வேறயா. முட்டி தூக்கிட்டான். '


'ப்ச்..'


'அம்மா, பொண்டாட்டிலாம் ஒரே ஒப்பாரி. ரொம்ப கஷ்டமாயிடுச்சு.'


'கஷ்டம் தான். இப்போலாம் இந்த மாதிரி கேஸ் தான் நெறைய வருது. அய்யா செம காண்டு. தீர்ப்பு பூராம் நாயி, பன்னி தான்.'




நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயிலில், டிரைவர் நிரந்தர உறுப்பினர் கார்டை காண்பிக்க, 


ராகவன்
பெர்மிட்: நரகம் மட்டும்
வகை: அமரர் ஊர்தி


காவலாளி சட்டையில் எருமைத்தலை சின்னத்துடன், 'யமா செக்குரிட்டி சர்வீஸ், யக்ஷபுரி, நரகம் - 69' என பொரித்திருக்கிறது.


'சார்ஜ சீட் குடுங்க'


ராமு வெளிர் மஞ்சள் காகிதத்தை நீட்டுகிறான்.


'நேரா போயி மூணாவது ரைட்டு. பெஞ்ச 34. நீங்க நாலாவது ஹியரிங்.'


கார் திரும்ப, சிக்னலில் சிகப்பு பச்சையாகிறது. 


பச்சையிலிருந்து சிகப்பாகிறது பாதசாரிகளுக்கான சிக்னல். இதுவரை முன் வைத்த காலை பின்வைக்காத ராஜூ, சிக்னலுக்கிணங்கி, அதை விட யமனின் அவதாரமான தண்ணீர் லாரிக்கு மரியாதை செய்யும் விதமாக, வைத்த காலை பின் வைக்கிறான். 'சூ..' என வாயால் காற்றை தள்ளி வலது பக்கம் திரும்ப, அதே சமயம் இடது பக்கம் திரும்பும் சுடிதார் சொர்க்கம். ராஜூ மெலிதாக புன்னகைத்தான். சுடிதார் தலையை வலதாக திருப்பி நோகடித்தது. 'இவளுக்கே இந்த ஏத்தமா!' என ராஜூ இடது பக்கம் திரும்ப, அங்கே சுடிதார் அணிந்த கிழ சொர்க்கம் பொக்கை வாய் காட்ட, இம்முறை கம்பீரமாக வலது திரும்பினான் ராஜூ.  ராஜூ திசையிலிருந்து வலது திரும்ப சிக்னல் பச்சை காட்ட, உண்டிவில்லின் கல் போல் பறந்தன வாகனங்கள். ராஜூவும் சாலையின் ஒரு பகுதி கடந்து டிவைடரின் பக்கவட்டில் போய் நின்றான். அவன் முன்னால் இண்டிகா கேப் ஒன்று கடந்தது.

ராமு வந்த இண்டிகா மெல்ல வேகம் குறைந்து, முழுவதும் நின்று கதவு திறக்கிறது. 


'ஆல் த பெஸ்ட் சார்'


'தேங்க்ஸ்'


திருவிழா போல் கூட்டத்தில் ராமு பெஞ்ச 34ஐ தேடி கண்களை உருட்டுகிறான். வலது, இடது. காணும். தலையை தூக்க முப்பத்தி நான்கில், நான்கு சற்று அழிந்து '3L'  போல உருமாறியிருக்கிறது. ராமு தேநீர் கொண்டு கடப்பவரிடம்,


'இதான் 34 ஆ?'


'ஆங். ஹியரிங் ஆரம்பிச்சுடுச்சு போங்க சீக்கிரம்'


'ஓ.. தேங்க்ஸ்.'


'இருக்கட்டும்'


ராமு வேகமாக நுழைகிறான். நீதிபதி கருப்பு நிற அங்கியுடன் கீழே குனிந்து வாசித்துக்கொண்டிருக்கிறார். நிமிர்ந்து அழைக்கிறார்.


'பசுபதி'


'அய்யா' இரண்டாம் வரிசையில் இருந்து ஒருவர் எழுந்து நிற்கிறார். 


'கூண்டுக்கு வாங்க'


வெள்ளை வேட்டி, சட்டையில், கிட்ட தட்ட தலை இன்னும் சில வருடங்களில் பட்டா போட்டு விற்கப்பட்டுவிடும் நிலையில், ஓட்டமும் நடையுமாக வந்து கூண்டில் ஏறி நிற்கிறார். 


'எப்புடி வந்தீங்க இங்க?'


'காருலங்கய்யா..'


'டிரைவர் ஏதும் பேசுனாரா?'


'ஹ்ம்ம்..'


'என்ன சொன்னாரு?'


'இங்கயே இருக்கறதா சொன்னாரு. இறங்கும்போது சிரிச்சாரு'


'ஏன் இங்கயே இருக்காரு?'


பசுபதி முழிக்க, நீதிபதி தொடர்கிறார்.


'ஏன்னா இருக்கற காலத்துல உண்மையா, நேர்மையா இருந்தாரு. இங்க வந்தாரு. முப்பது வருசமா இருக்காரு. இன்னும் பத்து பதினஞ்சு வருசத்துல சொர்கத்துக்கு மாத்துனாலும் மாத்துவாங்க. உங்களுக்கு அந்த ஆச இல்லையா? திரும்ப திரும்ப கஷ்டப்படுனுமா?'


'இருக்குங்கய்யா.'


'அப்புறம் ஏன் குமார வெட்டுனீங்க? அவங்க பங்காளிங்க உங்கள கொன்னுட்டாங்க'


'என் நெலத்த அவன் பேர்ல மாத்திக்கிடாங்கய்யா..'


'கேஸ் போடுங்க. அதுக்காக வெட்டுறதா?'


பசுபதி தலை குனிகிறார். 


'அடுத்த ஜென்மம் நாயா குடுக்கவா? இல்ல ஒழுங்காருப்பேன்னு சொல்லுங்க சென்னைல போடுறேன். என்ன இருப்பீங்களா?'


'இருப்பேங்கய்யா'


'குட். நாளைக்கு மதியம் ரெண்டு இருபதுக்கு பொறக்க போறீங்க.  பிரம்மா ஆபீஸ்ல போயி பெர்த் சர்டிபிகேட் வாங்கிக்குங்க. போங்க.'


'நன்றிங்கய்யா'


'ஹ்ம்ம்..'


நீதிபதி பிறப்புத்தரவில் கையெழுத்திட்டு விட்டு அடுத்த காகிதத்துடன், 'ராமு?'


ராமு எழுந்து கூண்டில் போய் நிற்கிறான்.


'இங்கல்லாம் ஒழுங்கா நடந்து வரீங்க.  அங்க என்னடானா எப்போவும் தலைய சாச்சிக்கிட்டு போன் தான். சாப்டும்போது, நடக்கும்போது, ஏன் பாத்ரூம்ல கூட. வண்டி ஓட்டும்போது கூட அப்புடி என்ன பேச்சு?'


'என் பொண்டாட்டியோட..'


'அதான் வீட்டுலயே இருக்காங்களே போயி பேச வேண்டியதான? சரி பசுபதி கத தான். நாயா? மனுசனா?'


'மனுஷன் சார். இந்த தடவ கிளீனா இருப்பேன்.'


'அடுத்த தரம் இப்புடி வந்தீங்கனா கண்டிப்பா பன்னி தான். ஏற்கனவே பன்னிங்க கம்மியா இருக்குனு மேலிடத்துலேந்து ஒரே பிரசர். நாளைக்கு ரெண்டு இருபத்தொன்னுக்கு, மதுரைல'


'பேரு சார்?'


'ராஜூ'

'ராஜூ.. ராஜூ.. ராஜூ..' அம்மாவின் குரல், பெயர்வைத்தபோது, காதில் கேட்ட குரல். ராஜூவின் காதில் எதிரொலித்தது. கர்ண கொடூரமாக இன்னோவாவின் ஹாரன் சத்தம் ராஜூவை பூமிக்கு திருப்பியது. ராஜூவை கிட்ட தட்ட நரகத்திற்கு திருப்பி அனுப்பிவிட பிரயத்தனப்பட்டு, டயர் திருகி, ரோட்டை தேய்த்து நின்றது.

டிரைவர் 'யோவ்.. செவுடாயா நீ..'

'சாரிங்க..'

'பூரி.. காதுல மாட்டிருக்கரத கழட்டி ஏறி.. புண்ணியமா போகும்..'

ராஜூ மொபைலை ஒரு முறை பார்த்துவிட்டு, இயர் போனை கழட்டி, தன பின் பையில் வைத்து விட்டு, தலையை ஒரு உலுக்கு உலுக்கி, நிமிர்ந்தான். பாதசாரிகளுக்கான சிக்னல் சிகப்பிலிருந்து பச்சை ஆனது.

சிக்னல் பச்சையிலிருந்து சசிகப்பானது. ராஜூ/ராமு திரும்பி பின்னால் அமர்ந்திருப்பவரிடம் 'என்ன சார் பர்ஸ்ட் டைமா?'