வெண்பா.. - "ஈஸியா எழுதலாம் வெண்பா" என்ற புத்தகத்தை படித்ததின் தாக்கம் தான் இவ்வலைப்பூ. பதினோராம் வகுப்பு முதல் சமஸ்கிருதம் முதல் மொழி ஆகிப்போனதால் விட்டுப்போன தமிழ் இலக்கணத்தை எனக்கு மறுஅறிமுகம் செய்த புத்தகம். புத்தகத்தை எழுதிய இலவசக்கொத்தனாருக்கும் (புனைப்பெயர்!), என் அண்ணனுக்கும் நன்றிகள்.
தேமாவும், புளிமாவும் புரியாத புதிராகவே இருக்கும் மாணவர்களுக்கு மிகவும் ஏற்ற புத்தகம். சினிமா மூலம் வெண்பாவை எளிமையாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ஏற்கனவே வெண்பா இலக்கியம் அறிமுகமானவர்களுக்கு, இந்நூலில் விளக்கியிருக்கும் விதம் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக தோன்றினாலும், புதிதாக படிப்பவர்களுக்கு வரப்பிரசாதம். வெண்பா விளக்கப்பட்டுள்ள விதம் இது தான்.
சீர்களை பின்வருமாறு பெயரிட்டுக்கொள்வோம்.
நேர் நேர் - சூர்/யா, நிரை நேர் - வடி/வேல், நேர் நிரை - ஜோ/திகா, நிரை நிரை - ரக/சியா
நேர் நேர் நேர் - ஐஸ்/வர்/யா, நிரை நேர் நேர் - நயந்/தா/ரா
நேர் நிரை நேர் - மா/ளவி/கா, நிரை நிரை நேர் - ஜெய/லலி/தா
வெண்பா எழுதும் விதிகள் இவை தான்:
1. வெண்பா இரண்டு வரி முதல் எத்தனை வரிகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
2. கடைசி வரியில் மூன்று வார்த்தைகளும் மற்ற அனைத்து வரிகளிலும் நான்கு வார்த்தைகளும் இருக்க வேண்டும்.
3. மேலே குறிப்பிட்ட அசைகள் படி, பெண்களுக்கு பின்னால் ஆண்கள் வரக்கூடாது.
4. கடைசி வார்த்தை ஒரே அசையாகவோ, 'உ' என்ற ஓசை கொண்டோ முடிய வேண்டும்.
5. எதுகை மோனை வேண்டும்.
மேலே சொன்னவை மேலோட்டமாக நான் சொன்ன விதிகள். இவற்றை எவ்வளவு சுலபமாக நினைவில் கொள்வது, எவ்வாறு பயன்படுத்துவது என ஒரு கதை போல எளிமையாக விளக்குகிறார் இலவச கொத்தனார். படித்ததன் பலனாக கீழே ஒன்று
வலையோடு நில்லாமல் வக்கனை பேசாமல்
விலைகொடுத்துப் படித்துப் பார்!
Nantri.. I will read it.
ReplyDelete