"அப்பா இங்க ஒரு புக்கும், சி.டி. யும் வச்சுருந்தாரமே பாத்தியா டா.." அம்மா வினவினாள்.
"அப்பா இல்லை இனிமேல் அப்பன்" - சொல்ல நினைத்தான் சரவணன். மரியாதையை தானே குறைத்துக்கொண்ட ஜீவன். எவ்வளவு ஆசைப்பட்டிருப்பேன் அப்பா போல் ஆக வேண்டுமென. இனிமேல் அது (அவன் குறைந்து அஃறினையாக அது ஆனது) போல் ஆகாமல் போனால் சரி.
"ரெண்டுமன்நேரமா தேடிட்டு இப்போம் தான் டா வெளிய போயிருக்காரு. வந்து இன்னும் கெடைக்கலயானு கத்துவாரு டா.. கொஞ்சம் தேடேன்.." கெஞ்சிக்கொண்டே அடுக்களையில் தேட சென்றாள் அம்மா.
கோபம். அது ஒன்று தான் குறைச்சல். இந்த மானம் கெட்ட ஜீவனுக்கு அது வேறு வருமா? பார்க்கலாம்.
"அவரு என்ன சின்ன பையனாடா? எங்கயாவது மறதில வச்சுருப்பார். கொஞ்சம் தேடேன்.."
அதையே தான் நானும் கேட்கிறேன். சின்ன வயசா இது போன்ற செயலை செய்ய. அதுவும் வீட்டிலயே. அந்த கருமத்தை இவள் வேறு ஓயாது தேடி கொண்டிருக்கிறாள்.
வெளியே அப்பாவின் வண்டி சத்தம் கேட்டது. வந்து ஏதாவது கேட்கட்டும் வைத்துக்கொள்கிறேன்.
"என்னடி கெடச்சுச்சா?" கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் அப்பா.
"இல்லையே! எங்க வச்சிங்கனு ஞாபகம் இருக்கா?" அம்மா.
"அது தெரிஞ்சா எடுத்திருக்க மாட்டேன். உன்ன போயி கேட்டேன் பாரு. தள்ளு..."
"ஏண்டா தேடு தேடு னு எத்தன நேரமா சொல்லிட்டிருக்கேன். " அம்மா சரவணனை ஏசினாள்.
"அறிவு கெட்டவளே. அவன் கிட்ட கேக்காத னு சொல்லிட்டு தான போனேன்."
"என் கட்டிலுக்கு அடியில் தான் கெடந்துச்சு எடுத்து அங்க வச்சுருக்கேன். ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டை காட்டினான்.
அப்பாவுக்கு சுருக்கென்றது. சரி எப்படியும் ஒரு நாள் தெரியத்தானே வேண்டும். புத்தகத்தை பிரித்தார். ஒரு அழகி புன்னகையை மட்டுமே ஆடையாக அணிந்த படி நின்று கொண்டிருந்தாள். சி.டி. யிலும் அதே போன்றதொரு குடும்ப படம். சரி இரவு வந்து பதின்மூன்று வயது சரவணனுக்கு விளக்கி கொள்ளலாம் என அவற்றை எடுத்துக்கொண்டு சென்றார், பாலியல் துறை மருத்துவரின் உதவியாளரான "அப்பா"வி.
excellent da.. wow... amazed...
ReplyDeleteThanks Vicky..
ReplyDelete