
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை Citi Centre ல்உள்ள INOX திரையரங்கத்தில் கந்தசாமி படம் பார்க்க நேர்ந்தது (குழம்ப வேண்டாம் சரியான வார்த்தை உபயோகம் தான். உதாரணம் - "விபத்து நேர்ந்தது"!).
ஊரில் உள்ள மக்கள் அனைவரும் குறை தீர்க்க கந்தசாமியிடம் வேண்டுகிறார்கள். கந்தசாமியும் தீர்த்து வைக்கிறார்.
இந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு படத்தை இரண்டே முக்கால் மணி நேரம் இழுத்தடித்திருக்கிறார்கள்.
முதல் காட்சியில் ஏழைப்பெண்ணின் அப்பாவின் அறுவை சிகிச்சைக்கு கந்தசாமி கொடுத்த பணத்தை விழுங்கப்பார்க்கும் காவல் அலுவலர் மன்சூர் அலி கானை சேவல் ரூபத்தில் வந்து தண்டிக்கிறார் கந்தசாமி. முருக பகவானின் கொடியில் இடம்பெற்ற ஒரே காரணத்தை தவிர சேவல் அவதாரத்திற்கான காரணம் படத்தின் கடைசிவரை விளங்கவில்லை.
படத்தின் நாயகி ஷ்ரேயா சரண். அவரிடம் இருந்து பெரிதாக எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், வெறும் அழகு, மன்னிக்கவும், வெறும் பொம்மையாக மட்டும் அலைவது எரிச்சலை தருகிறது.
சேவல் அவதாரமே தலை முடியை கொத்திக்கிளரியது போல ஒரு சிகையலங்காரம்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி மற்றும் பாடல் இசை காதை பதம் பார்க்கிறது. காதை மூடிக்கொண்டு கேட்டாலும் இசை துல்லியமாக விழுகிறது. குறிப்பாக "என் பே.. என் பே.. என் பேரு மீனாகுமாரி" என்ற கருத்தாழமிக்க பாடல்.
காதையாவது மூடிக்கொள்ளலாம். கண்ணை மூடிக்கொண்டு படம் பார்க்க முடியுமா? தொகுப்பாளர் அந்த சிரமத்தையும் பார்வையாளர்களுக்கு தருகிறார். ஒரு வினாடி கூட ஒரே இடத்தில் நிற்க மறுக்கின்றன காட்சிகள்.
காவல் துறை அதிகாரியாக வரும் பிரபுவுக்கு சாமன்யருக்கு கூட உடனே தோன்றும் யோசனைகள் மிக மிக தாமதமாகவே தோன்றுகின்றன. அதற்குள் கந்தசாமி அல்வா குடுத்து விடுகிறார். படத்தில் அவர் சொல்லும் "Bull shit" , "என்ன கொடும சரவணன் இது" க்கு பிறகு மிகவும் குறிப்பிடத்தகுந்த வசனம்.
துக்கடா வங்கியில் கூட வாடிக்கையாளரின் கணக்கில் பணம் போடப்பட்டலோ எடுக்கப்பட்டலோ உடனே அவரின் செல் பேசிக்கு குறுந்தகவல் செல்லும் வசதி உள்ளது. ஆனால் ஆஷிஷ் வித்யார்த்தி முழுவதும் மொட்டையடிக்கப்பட்டும் தாமதமாக இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்வது நம்ப முடியாத வகையில் உள்ளது.
முடிவாக கந்தசாமிக்கு நான் ஒருவேண்டுதல் விடுக்க போகிறேன். "சாமி இனிமே யாரும் என்னைய மாதிரி ஏமாந்து கந்தசாமி பாத்திரக்கூடாது"..