அப்பா தான் எவ்வளவு மாறிவிட்டார்? அவினாஷ் சென்று எழுப்பினான்.
'வா தாத்தா பால் வாங்க போலாம்'
லாவண்யா அவனிடம் 'தாத்தா தூங்குறா கண்ணா. எந்திரிக்க மாட்டா'
'நேத்து எந்திருச்சாளே!'. யாரிடமும் பதில் இல்லை. 'தாத்தா, தாத்தா'. அவினாஷை தூக்கிக்கொண்டு வெளியே வந்தேன். எனக்கு அப்பாவை ஐம்பத்தைந்து வருடங்களாக பரிச்சயம். அதை வடிகட்டினால் சத்தான சாறாக கடைசி பதினைந்து வருடங்கள் தேரும். அவினாஷ் போல் நான் இருந்த போது என்னை காலை ஐந்தரை மணிக்கு எழுப்பி, ஹீரோ சைக்கிளின் முன் கேரியரில் அமர்த்தி பேசிக்கொண்டே வருவார்.
'பார்த்தி கண்ணா எங்க போறோம்?'
'பால் வாங்க'
'இந்த சைக்கிள் பேரென்ன?'
'ஹீரோ. ஏன்பா இதயே கேக்கிற தினமும்?'
சிரித்துக்கொள்வார்.
'அப்பாக்கு மறந்துடறது டா'
'பொய்'.
மறுபடியும் சிரிப்பார்.
பத்து வயதுக்கு மேல் கூட்டிக்கொண்டு போவதை நிறுத்திவிட்டார். புதிதாக டி.வி.எஸ். பிப்டி வாங்கியிருந்தார். காலையில் தினமும் என்னை பேருந்து நிருத்தத்திற்கு கொண்டுவிடுவதற்கு முன்னால் அதைத்துடைப்பார். எந்த பொருளையும் சரியாக பராமரிக்க வேண்டும் என்பதில் திண்ணமாக இருந்தார். என்னுடன் அத்தையும் வருவாள். எனக்காக பாசித் அண்ணா சீட் போட்டுக்கொண்டு வருவான். தினமும் ஏதாவது கேட்பான்.
'உங்க அப்பா என்னடா பண்றார்?'
'கலக்டர் ஆபீஸ்ல ஒ.ஏ. வா இருக்கேன்னு சொன்னார்ணா'
'டேய் ஒ.ஏ னா ஆபீஸ் அசிஸ்டன்ட் டா'
'அப்டினா?'
'பியூன் மாதிரிடா. வெளிய சொல்லாத'
'!!'
'சரி உங்க அத்தை என்ன பண்றா?'
அந்த வயதில் அப்பா பியூன் வேலை செய்கிறார் என்பது ஜீரணிக்க கஷ்டமாகவே இருந்தது. அப்பா என்னிடம் ஏதோ பெரிய உண்மையை மறைத்து விட்டதாக கோபம் கோபமாக வந்தது. பாசித் அண்ணா வேறு வெளியில் சொல்லாதே என்று சொல்லி விட்டான். இனிமேல் அப்பாவுடன் பேசவே கூடாது என்று தீர்மானித்துக்கொண்டேன்.
'அப்பா'
'ம்ம்'
'ரேன்க் கார்டுல கையெழுத்து போடணும்'
'அதான் முடியாதுன்னு சொன்னேனே'
'இன்னிக்குதான்பா கடைசி நாள். நாளைக்கு குடுக்கலேன்ன சாம்பமூர்த்தி சார் அடிப்பார்'
'வாங்கு. அப்போ தான் அடுத்த தரம் நல்ல மார்க் எடுப்ப.'
இந்த அம்மாவும் எதுவும் சொல்லாமல் பாத்திரம் தேயத்துக்கொண்டிருக்கிறாள்.நாளைக்கு நான் மட்டும் பிரம்படி வாங்கினால் வீட்டுக்கு வரமாட்டேன். இருவருக்கும் அது தான் தண்டனை. காலையில் ரேன்க் கார்டில் கையெழுத்திட்டிருந்தது. அம்மா தான் வாங்கி வைத்திருப்பாள். அம்மா புண்ணியத்தில் அப்பா தப்பித்துவிட்டார். அத்தை இன்றைக்கு சேலை உடுத்தியிருந்தாள். பிறந்தநாள் என்று பாட்டியிடம் நமஸ்காரம் செய்து காசு கேட்டாள்.
'அவனுக்கு ஸ்கூலுக்கு நேரமாறது வா சீக்கிரம்' , அப்பா விரட்டினார்.
அத்தை ஓடிவந்து ஏறிக்கொண்டாள். அன்றைக்கு பள்ளிக்கு தாமதமாக போய் உக்கி போட்டேன். இன்றைக்கு அத்தையை நன்றாக மாட்டி விட வேண்டும். ஆனால். நான் சொல்வதை கேட்கும் நிலையில் எவரும் இல்லை.
'போயும் போயும் *#$%@^& பயலா கெடச்சான்?'
'அம்மா! வாய மூடு. அதான் இன்ஸ்பெக்டர் போன் பண்ணியிருக்காரே. என்னாறது பாக்கலாம் இரு.'
'என்ன ஆகப்போறது இனிமே.....'
மூன்று மணி நேரத்தில் அப்பா அத்தையை இழுத்துக்கொண்டு வந்தார். அழுது மூஞ்சியெல்லாம் வீங்கியிருந்தது அத்தைக்கு.
'நீ உருப்பட மாட்டடா. நன் செத்து போயிருவேன் இன்னி ராத்திரியே! நீங்கெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது' அத்தை அப்பாவை பார்த்து கத்தினாள். அப்பா கோபமாக ஒரு அறை விட்டார். அத்தை சுருண்டு கீழே விழுந்தாள். அவ்வளவு கோபமாக அப்பாவை நான் பார்த்ததில்லை.
'பார்த்தா நீ பெரிம்மா ஆத்துக்கு போ. நாளைக்கு அங்கேந்து ஸ்கூலுக்கு போலாம்'
'அங்கேந்து ரொம்ப தூரம்பா.'
அப்பா முறைத்தார். அம்மா என்னை உடனடியாக கிளம்புமாறு சைகை காட்டி, என்னை வெளியே அழைத்துச்சென்றாள்.
'அப்பா ஏன்மா இப்படி நடந்துக்குறார். காட்டான் மாதிரி.'
'டேய். அதிகப்பிரசிங்கத்தனமா பேசாத. படிக்கிற வேலைய மட்டும் பாரு. பெரிம்மாட்ட சொல்லிருக்கேன். ஒழுங்கா ஸ்கூலுக்கு போ.'
மறுநாள் தினத்தந்தியில் பாசித் அண்ணன் இதே போன்று மூன்று பெண்களை கலியாணம் செய்துகொண்டுள்ளதாக போட்டிருக்கிறது என பெரியப்பா சொல்லிக்கொண்டிருந்தார். நான் நம்பவில்லை. யார் சொன்னாலும் அப்பா அத்தையை அடித்தது தவறு தான். அப்பா செய்வது எதுவும் பிடிக்கவில்லை எனக்கு. ஒரு வருடத்தில் அத்தைக்கு திருவாரூரிலிருந்து ஒரு ஓவர்சீயரை கல்யாணம் செய்து வைத்தார்கள். எனக்கு அத்தை பார்த்தால் பாவமாக இருந்தது. ஆனால் அத்தை சந்தோசமாக இருப்பதாகவே தோன்றியது. பாசித் அண்ணா தான் பாவம். எல்லாம் அப்பாவால் தான்.
அதிலிருந்து அப்பாவிடம் கொஞ்சம் தூரமாகவே இருந்தேன். ஓரிரு வார்த்தைகளில் எங்கள் சம்பாஷணைகள் முடிந்தன. மோட்டார் சைக்கிள் விஷயத்தில் தான் பூதமாக வெடித்தது.
'எதுக்குடி அவனுக்கு இப்போ மோட்டார் சைக்கிள்?' அப்பா
'காலேஜ் தூரமா இருக்காம்' அம்மா
'இவ்வளவு நாள் தூராமா இல்லையோ?'
'ஆமா நாளைலேந்து அஞ்சடி தள்ளி வைக்கறா' நான்.
'அடி நாயே. நக்கல் பண்ராண்டி'
'பேசாம வாங்கி குடுத்துருங்கோளேன்.'
'என்கிட்டே ஏதுடி பணம்.'
'எல்லா அப்பாவும் வாங்கித்தரா'
'உங்கப்பா ஒன்னும் கள்ள நோட்டு அடிக்கல'
'அத பண்ணிருந்தாலும் பிரயோசனமா இருந்திருக்கும்'
கிரிக்கெட் மட்டயைக்கொண்டு அடிக்க வந்தார். 'வேணும்னா நீ சம்பாதிச்சு வங்கிக்கடா.'
'இனிமே உன்கிட்ட பணம் கேட்டா செருப்பாலடி'
அதன் பிறகு அப்பாவிடம் பணம் கேட்கவில்லை. லார்சன் அண்ட் டூப்ரோவில் வேலை கிடைத்தது. நானே பைக் வாங்கிக்கொண்டேன். இனி அப்பாவை நம்பி நான் இல்லை. அம்மாவை நன்றாக வைத்து காப்பற்ற வேண்டும். அப்பா நான் எதிர்பார்ததற்கு மாறாக சந்தோசமாக இருந்தார். 'எல் அண்ட் டி. ஆமா மூணு மாசம் டிரைநிங்காம். சீக்கிரம் கல்யாணம் பண்ணிடனும்'
'நான் வசுந்தராவ லவ் பண்றேன்மா'
'அப்பாக்கு கேட்டுரப்போறது டா. மெல்லப்பேசு'
'கேட்கட்டும்னு தான் சொல்றேன்'
அம்மா அடுத்த அறையில் பேசுவது கேட்டது.
'என்னங்க நீங்களும் உளர்றீங்க?'
'இருக்கட்டுமேடி. நல்ல பொண்ணுதான. அவன் இஷ்டப்பட்டபடி நடக்கட்டுமே'
அப்பா மாறியிருக்கிறார். நம்பக்கூடாது. எப்பொழுதும் மாறலாம். கல்யாணம் முடிந்தது. என்னால் நம்பமுடியவில்லை. அப்பா உண்மையாகவே மாறிவிட்டிருக்கிறார். இல்லை நான் மாறுகிறேனா? அதெல்லாம் இல்லை. நன் சரியாக தான் இருக்கிறேன். அப்பாவிற்கு வயதாக ஆக தான் புத்தி வருகிறது. வசுந்தரவிடம் சண்டையிடாமல் இருந்தால் போதும்.
அவளுடன் அப்பா சகஜமாகவே இருக்கிறார். நான் தான் அடிக்கடி சண்டை போடுகிறேன். அன்றைக்கு பெரிய வக்குவாதமாகி அடித்து விட்டேன்.
'பார்த்தா',அப்பா
'மம்'
'பார்ர்த்தா'
'ம்ம்ம்ம்'
'திரும்புடா இங்க'
திரும்பினேன்.
'ஏண்டா அழற?
'அதெல்லாம் ஒண்ணுமில்ல. கொட்டாவி விட்டேன். கண்ணுலேந்து தண்ணி வருது.'
'அவ என்ன பேசிருந்தாலும் கை நீட்டிருக்க கூடாது'
'அவ எதுக்குப்பா அப்பிடி குத்தற மாதிரி பேசறா?'
'அப்டி தாண்டா பேசுவா. அடுத்த க்ஷணம் மறந்துடுவா.'
அப்பா தோள்களில் சரிந்தேன். 'போ. போயி. சமாதானம் பண்ணு.' அப்பாவுக்கும் கொஞ்சம் வாழ்க்கை புரிந்திருக்கிறது. ரொம்பவும் மோசமில்லை.
ரிடயர் ஆகிவிட்டார். ஆனாலும் பிஸியாக இருக்கிறார். ராகவ் பிஸியாக வைத்திருக்கிறான். என் முதல் மகன். ஆனால் முன்பைப்போல் வேகமாக ஓட முடிவதில்லை அப்பாவால். அல்லது ராகவை பிடித்துவிட கூடாதென்று அப்படி ஓடுகிறாரா? எங்களை விட அம்மாவும் அப்பாவும் அவனை நன்றாக பார்த்துக்கொண்டார்கள். எனக்கு தான் கவனம் சிதறிவிட்டது. ஷேர் மார்க்கெட்டில் நிறைய விட்டுவிட்டேன். வசுந்த்ராவிடம் சொன்னால் பயப்படுவாள். கோபப்படுவாள். அழுவாள். உண்டாகியிருக்கிறாள். இந்த சமயம் சொல்லக்கூடாது.
'அப்பா'
'ராகவ் அத தொடக்கூடாது. சொல்லுடா.'
சொன்னேன்.
'சரி விடு. என்கிட்டே ஒரு அஞ்சு லட்சம் இருக்கு. அத வச்சு சமாளிச்சுக்கலாம்'
'ஆனா நான்தான் உன்கிட்ட பணம் வாங்க மாட்டேன்னு சத்தியம் செஞ்சுருக்கேனே'
'சத்தியம்! பொடலங்கா. வசுந்தராட்ட சொல்லிடலையே'
அப்பா சரியாகத்தான் இருந்திருக்கிறார். அவருடைய முடிவுகள் சிறு கோபத்தினாலோ, உணர்சிவசத்தினலோ எடுக்கப்பட்டவை அல்ல. நான் மட்டும் இப்படி இருக்கிறேனா இல்லை அப்பாவும் மகனாக இருந்த பொழுது இப்படிதான் இருந்தாரா?
அப்பாவுக்கு சர்க்கரை அதிகமாகி மூன்று நாட்கள் தாங்கினால் அதிகம் என்று சொல்லிவிட்டார் டாக்டர்.
'பா..ரர்..தா'
'என்னப்பா?'
'மன்னிச்சுக்கோடா'
'எதுக்குப்பா?'
'எல்லாத்துக்கும்'
'நீ தானப்பா என்ன மன்னிச்சுக்கணும். உன்னைப்பத்தி தப்பா நெனச்சிண்டிருன்தேன். ரொம்ப கஷ்டபடுத்திட்டேன். நீ தன் என்ன மன்னிக்கணும்'
கேட்டாரோ இல்லையோ தெரியவில்லை. உயிர் பிரிந்துவிட்டிருந்தது. என்ன கேட்கிறீர்கள்? அப்பாவின் பெயரா? அப்பா என்பதே ஒரே குணாதிசியம் கொண்ட ஒரு சாராரின் பேர்போலத்தான் எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு?