Wednesday, 10 October, 2012

ஆஸ்பத்திரி அவஸ்தைகள்..

6 comments:

வயிற்றில் வலியேதுமின்றி, ஆனால் விவரித்துக்கூறமுடியாதபடி  ஒரு 'uncomfort' பல நாட்களாக படுத்திக்கொண்டிருந்தது. ஒரு மாதம் விடுமுறை எடுத்து அல்செருக்கென மருந்துகள் எடுத்துக்கொண்டும், ஒன்னும் பேரவி ல்லை. கடைசி முடிவாக ஓர் 'Endoscopy' எடுத்து விடலாம் என விஜயா ஆஸ்பத்திரிக்குச்சென்றேன். அதில் ஆரம்பமாயின அவஸ்தைகள்.

முதலில் 'Endoscopy' எடுக்க வெறும் வயிற்றில் காலை எட்டு மணிக்கு சென்று பத்து மணி வரை காத்திருந்தோம். தண்ணீரை கொஞ்சம் உறிஞ்சுக்கொள்ளலாம். Endoscopy அறைக்குள் சென்றதும் இடது பக்கம் ஒருக்களித்து படுக்க சொன்னார்கள். வாய்க்குள் ஒரு கொழ கொழ மருந்தை விட்டார்கள். கலையிலிருந்து சாப்பிடாமல் இருந்தது வயிற்றை பிரட்டியது. பல்களுக்கு இடையில் ஒரு இடைச்செருகலை செருகி, வாயை மூட முடியாதபடி செய்து, தொண்டைக்குள் மின்சார விளக்குடன் கூடிய ஒரு குழாயை செலுத்தி வயிறு வரை அனுப்பினார்கள். ஒரு நிமிடமே அவர்கள் செய்த இந்த செயல், அகிலத்தையே வாயிலிருந்து வெளிக்கொண்டுவந்திட்டிருந்தது. அதோடு முடியவில்லை அவஸ்தை. Endoscopy மூலமாக பிரச்னை இருப்பதை மட்டுமே கண்டுபிடிக்க முடியுமெனவும், என்ன பிரச்னை என்பதை சரியாக கண்டுபிடிக்க இன்னும் சில பரிசோதனைகள் செய்யவேண்டுமெனவும், அதற்கு  மருத்துவமனையில் ஒரு நாள் தங்குமாறும் பணித்தனர். அவ்வண்ணமே நானும் பணிந்து அன்று மாலையே அனுமதிக்கப்பட்டேன்.

அன்றிரவே 'பொது பரிசோதனைகள்' என உடம்பிலுள்ள அனைத்து பாகங்கள், திசுக்கள், இரத்த நாளங்கள், சுரக்கும் திரவங்கள் என அனைத்தையும் உறிஞ்சி பரிசோதனை செய்தனர். மறுநாள் நான் முதல் பரிசோதனைக்கு போகும் முன்னர் பயிற்சி மருத்துவர் ஒருவர் வந்து எனக்கு நலம் விசாரித்து விட்டு, எனக்கு மஞ்சள்காமாலை இருக்கின்றதென சிரித்தவாறு சொன்னார். அதன்பிறகு, ஒரு நாள் பல நாட்களாகவும், ஒரு C.T. scan, C.T. scan, Barium meal X-ray test, Colonoscopy என நீண்டது. இப்பரிசோதனைகளில், சிறுகுடலில் வீக்கமும், பெருங்குடலில் சிறு சிறு புண்களும் இருப்பது தெரிந்தது.

முன்பெல்லாம் மருந்துகளையும், ஊசிகளையும் கண்டு பயந்திருப்பேன். இம்முறை பரிசோதனைகளுக்கு தயார்படுத்திக்கொல்லுதல் (எழுத்துப்பிழை அல்ல!) என்பதில் மிகவும் வெறுப்படைந்து விட்டேன். வயிற்றில் ஒரு சோதனை செய்ய வேண்டுமானால், காலை நான்கு மணிக்கு எழுப்பி லிம்காவில் ஒரு மருந்தை கலந்து குடிக்க சொன்னார்கள். வெறும் வயிற்றில் சோடா. அதுவே வயிற்றுக்குள் ஒரு உலக யுத்தம் நடப்பது போன்று இருக்கும். அது வயிற்றை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று உடம்பில் உள்ள நீர்ச்ச்சத்தை எல்லாம் உறிஞ்சி எடுத்து விடும். அதற்கு பிறகு எப்போழுதடா பரிசோதனை செய்து முடிப்பார்கள் என்றாகி விடும். இந்த வேதனையில், ஒரு பரிசோதனைக்கு சென்று, இன்னும் வயிறு சுத்தமாகவில்லை, நாளைக்கு வாருங்கள் என்று வேறு கூறி விட்டார்கள். அடுத்தநாளும் அதே கொல்லுதல். போதுமடா சாமி!

எனக்கான வேதனைகள் இவையெனில், என் குடும்பத்தினருக்கு வேறு விதமாக. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரிசோதனை, அதற்கான முடிவு, மற்றொரு பரிசோதனை. என்ன பிரச்சினை என்பதை எண்ணி தினமும் பதில் கிடைக்காமல் போக, என்னை விட நொந்து போய் இருந்தனர். பத்து நாட்கள் கழித்து முடிவாக, பெருங்குடலில் ஒரு சிறிய கட்டி எனவும், சோதித்து பார்க்கும் பொழுதே அகற்றி விட்டதாகவும் கூறி அனைத்து பிரார்த்தனைகளுக்கும் பலன் குடுத்தார் மருத்துவர்.

முதலில் பரிசோதனைகளை கண்டு வெறுப்பும், குழப்பமும், சந்தேகமும் வந்தாலும், முடிவாக பார்க்கும்பொழுது, உடலை ஒரு கணிதக்குழப்பம் போல் எண்ணி, படிப்படியாக முடிச்சுகளை அவிழ்த்து, இறுதியாக ஆதார பிரச்சினையை கண்டறிந்த சூட்சுமும், முறையும் புரிந்தன. ஒவ்வொரு பிரச்சனையயும்  இவ்வளவு செலவழித்து கண்டுபிடிக்க அனைவரிடமும் காப்பீடும், அல்லது ரொக்கப்பணமும் இருக்கமா என நினைக்கும்போழுது  நம் நாடு மருத்துவத்திற்கான முக்கியத்துவத்தை எவ்வளவு தூரம் அலட்சியபடுத்தியிருக்கிறது என புலப்படுகிறது. மருத்துவமனைகள் பணம் பிடுங்கவில்லை, மாறாக அரசாங்கங்கள் நமக்கான உரிமையை சுரண்டி, மருத்துவமனைகள் மீது வெறுப்பையும், காழ்ப்புணர்ச்சியையும் ஏற்படுத்திவிட்டு , அவைகள் லாவகமாக தப்பித்துக்கொள்கின்றன. நமக்கான சுய அனுபவத்தில் தான்  இது புலப்படுகிறது. அதற்கு முன் விழித்துக்கொள்ளு ங்கள். குறைந்த பட்சம் ஒரு நல்ல காப்பீட்டில் சேர்ந்து கொள்ளுங்கள். அதுவே முதற்படி. வாழ்க வளமுடன்.